ஆப்கானில் உள்ள அமெரிக்கர்களை மீட்பது குறித்து தலீபான்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கா ராணுவ படையினர் வெளியேறியதை அடுத்து தலீபான்கள் அங்கு ஆட்சியை கைபற்றியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் பெண்கள் கல்வி கற்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்ல தடை விதித்துள்ளனர். மேலும் பெண்கள் பணிபுரியக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி முழுமையாக அமெரிக்கா படையினர் வெளியேறினர்.
இதனால் அங்கிருந்த அமெரிக்கா குடிமக்களும் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது இன்னும் சில அமெரிக்கர்களும் அந்நாட்டு ராணுவத்திற்கு உதவியவர்களும் ஆப்கானில் உள்ளதாகவும் அவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களை மீட்பதற்கான பணிகளை அமெரிக்கா அரசு தொடங்கியுள்ளது.
அதில் முதற்கட்டமாக அமெரிக்கா தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு ஒன்றை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இதே போன்று தலீபான்கள் சார்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தையானது கத்தாரில் உள்ள தோஹாவில் இரண்டு நாட்கள் நடக்கவுள்ளது.
குறிப்பாக அமெரிக்கா குடிமக்கள் 105 பேர், நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் 95 பேர் மற்றும் அமெரிக்கா ராணுவத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவியளித்தவர்கள் போன்றோரை மீட்பது குறித்து முக்கியமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் அமெரிக்கா அதிகாரிகள் மற்றும் தலீபான்களின் விவரங்கள் குறித்த எந்தவொரு செய்தியும் வெளிவரவில்லை.