தலீபான்கள் குற்றவாளிகளுக்கு கொடூரமான தண்டனைகளை வழங்குவது குறித்து அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலீபான்கள், கடந்த ஆட்சி காலத்தில் குற்றவாளிகளுக்கு பயங்கரமான தண்டனைகள் வழங்கியது போல இந்த ஆட்சியிலும் மோசமான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை மற்றும் திருடுவோருக்கு கை, கால் துண்டிப்பு போன்ற தண்டனைகளே வழங்கப்படும் என்று சமீபத்தில் கூறினர்.
கடந்த சனிக்கிழமையன்று ஆப்கானின் ஹெரட் மாகாணத்தில் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை தலீபான்கள் கைது செய்ததோடு அவர்களை சுட்டு கொன்றுள்ளனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை பொது இடங்களில் தொங்க விட்டனர். இந்த கொடூரமான செயல் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இதற்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது “தலீபான்கள் ஷரியத் சட்டப்படியே ஆட்சியமைப்போம் என கூறிவிட்டு மனித உரிமை மீறலுக்கு உட்பட்ட தண்டனைகளை வழங்கி வருகிறார்கள். இதனால் ஆப்கானில் மனித உரிமையை மேம்படுத்த சர்வதேச அமைப்புடன் சேர்ந்து நாங்கள் பணியாற்றுவோம். தலீபான்களின் அனைத்து நடவடிக்கைகளையும் உற்று நோக்கி வருகிறோம். மேலும் ஆப்கானின் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் உட்பட குழந்தைகளுக்கும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்” என்றும் கூறியுள்ளார்.