தள்ளுபடி விலையில் கார் தருவதாக டிரைவரிடம் 6 1\2 லட்சம் வரை பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெத்தரெங்கபுரம் பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கார் டிரைவரான வில்சன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது செல்போனில் முகநூலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில் ரூ.13 லட்சம் மதிப்பிலான கார் சிறப்பு தள்ளுபடி விலையில் ரூ.7 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக இருந்தது. இதனை உண்மை என நம்பிய வில்சன் அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். அதன்பின் அவர் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் முதல் தவணையாக ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் வில்சன் அதனை முழுமையாக நம்பவில்லை.
இதனையடுத்து செல்போனில் பேசிய நபர் ஆதார் அட்டை மற்றும் அவரது அலுவலகம் குறித்த வீடியோ ஆகியவற்றை வில்சனின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பினார். இதனால் வில்சன் முதல் தவணையாக ரூ.1 லட்சத்தை அந்த மர்மநபர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து வில்சனிடமிருந்து மாதம் ஒரு முறை ஒவ்வொரு காரணங்கள் கூறி ரூ.6 1\2 லட்சம் வரை அந்த மர்ம நபர் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து வில்சன் அந்த மர்ம நபரை போனில் பலமுறை அழைத்தும் போனை எடுக்கவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த வில்சன் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.