பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, சாம் மற்றும் குஷ்பூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க, தமன் இசை அமைத்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் டிசம்பர் 24-ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த விழாவுக்கான மேடை அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இசையமைப்பாளர் தமன் மற்றும் அனிருத் ஆகியோர் நேரில் சென்று அப்பணிகளை கவனித்துக் கொள்கின்றனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வரும் நிலையில், 2 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜயை பிரமாண்ட மேடையில் காண்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலில் இருக்கிறார்கள்.