சென்னையில் வீட்டின் குளியல் அறையில் வெந்நீர் போடுவதற்காக ஹீட்டர் ஸ்விச் போடும்போது மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமுல்லைவாயில் அடுத்த அய்யம்பாக்கம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு சசிகலா எனும் மனைவியும் விகாஸ் என்ற மகனும், ரேஷ்மா என்ற மகளும் உள்ளனர். சிறுவர்கள் இருவரும் அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர். அப்போது நேற்று மதியம் சசிகலா,வீட்டில் உள்ள குளியலறையில், குளிப்பதற்காக வெந்நீர் வாயிலில் தண்ணீர் ஊற்றி அதில் மின்சார ஹீட்டரை போட்டு, ஸ்விட்சை போட்டார்.
அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் மிகவும் அலறி சத்தமிட்டார். சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த விஜயகுமார், மனைவியை காப்பாற்ற முயன்ற போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதனால் கணவன்,மனைவி இருவரையும் மின்சாரம் தாக்கி குளியல் அறையிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிறிது நேரம் கழித்து சசிகலாவின் தம்பி சரவணன் வடிவேலு அக்காவிற்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர்கள் எடுக்காததால் வீட்டிற்கு வந்து பார்த்தார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர் வீட்டின் பின்பக்க கதவு வழியாக உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது தன் அக்கா மற்றும் மாமா தரையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார், அவர்கள் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி ஒரே நேரத்தில் தங்கள் தாய் தந்தையை இழந்து இரண்டு குழந்தைகள் அனாதையாக தவிப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.