தம்பதியரை தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவான குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஆறுமுகம்- ஈஸ்வரி. ஆறுமுகம் அப்பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார் . இத்தம்பதியினரின் மகன் உதயகுமார். இவர் திருமணமாகி தனது மனைவியுடன் பல்லடத்தில் வசித்து வருகிறார் . இந்நிலையில் உதயகுமாருக்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும் குழந்தை இல்லை. இதனால் உதயகுமாரின் பெற்றோர் மகனுக்கு குழந்தை பிறக்க வேண்டி பரிகார பூஜை செய்ய திட்டமிட்டனர். இந்நிலையில் வெள்ளக்கோவில் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த சக்திவேல்(35) என்பவர் பரிகார பூஜை செய்வதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து ஆறுமுகமும் ஈஸ்வரியும் சக்திவேல் மூலம் டிசம்பர் 29ம் தேதி இரவு தங்களது வீட்டில் பரிகார பூஜை நடத்தினர். இதே போல் டிசம்பர் 30ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பர்னிச்சர் கடையில் வைத்து பூஜை நடத்த திட்டமிட்டனர். ஆனால் அன்று ஆறுமுகம் கொடூரமாக தாக்கப்பட்டும் ஈஸ்வரி கொலை செய்யப்பட்டும் கிடந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .மேலும் ஐந்து சவரன் தாலிச் செயின் மற்றும் கடையில் இருந்த 1000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வந்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் சக்திவேல் என்பவர் பரிகார பூஜை செய்வதாக கூறி இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது .
இதனால் தலைமறைவான சக்திவேலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதுரையில் வைத்து சக்திவேலை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கடைக்கு அடிக்கடி வந்து செல்வதில் ஆறுமுகத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆறுமுகம் தனது குடும்பத்தின் நிலையை பற்றி சக்திவேலிடம் கூறியுள்ளார். சக்திவேல் தானே பூஜை செய்வதாக கூறியுள்ளார்.பின்னர் பரிகாரம் செய்வது போல் போல் நடித்து எதிர்பாராத நேரத்தில் ஆறுமுகம் மற்றும் ஈஸ்வரியை தாக்கி கொள்ளையடித்தது தெரியவந்தது.பின்னர் காவல்துறையினர் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து சக்திவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.