மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்திய தம்பதியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என்.சாலையில் ஆயுர்வேதிக் மசாஜ் என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் வடக்கு காவல்துறையினருக்கு மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மசாஜ் சென்டர் உரிமையாளரானா கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் வசிக்கும் ராஜேஷ் மற்றும் அவரது மனைவி அனு ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாநகர துணை போலீஸ் கமிஷனர் அரவிந்த், ராஜேஷ் மற்றும் அனு ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற போலீஸ் கமிஷனர் வனிதா தம்பதியினரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை மத்திய சிறை அதிகையிடம் வழங்கினர்.