உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் இப்ராகிம் (60)- ஹஸ்ரா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் இப்ராகிம் காசியாபாத்தில் இரும்புக்கடை நடத்தி வந்தார். கடந்த மாதம் 22ஆம் தேதி இப்ராகிம் மற்றும் அவரது மனைவி ஹஸ்ரா கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பணத்திற்காக 12 வயது சிறுவன் கூட்டாளியுடன் சேர்ந்து இப்ராகிம் மற்றும் அவரது மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
அதாவது, கொலையான தம்பதியினருக்கு 12 வயது சிறுவனை முன்கூட்டியே தெரியும். இதற்கிடையில் இரும்பு வியாபாரம் செய்யும் இப்ராகிமிடம் அதிக பணம் இருப்பதை அறிந்துகொண்ட அந்த 12 வயது சிறுவன் மன்ஜேஷ், ஷிவம், சந்தீப் ஆகிய கூட்டாளிகளுடன் இணைந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி சிறுவன் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து இப்ராகிமின் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சி செய்தார்.
அப்போது கணவன்- மனைவி தடுத்ததால் அவர்கள் இருவரையும் சிறுவன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். அதன்பின் சிறுவன் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான். தற்போது 12 வயது சிறுவன், அவனது கூட்டாளிகள் மன்ஜேஷ், ஷிவத்தை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சந்தீப்பை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.