தம்பதியினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் யாகூப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாஜிதா பர்வீன் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து யாகூப் காயல்பட்டினத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து யாகூப் மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு காயல்பட்டினம் கடற்கரைக்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கு பொருட்காட்சி பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றனர். அப்போது பரிமார் பகுதியில் வசிக்கும் அன்சாரி என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ யாகூப் மீது மோதியது. இதனை கண்டித்த யாகூப்பை அன்சாரி அவதூறாக பேசியுள்ளார்.
மேலும் அன்சாரி தனது சகோதரர் ஜ்மத் மற்றும் அவரது நண்பர்களான பரிமார் பகுதியில் வசிக்கும் சாகுல் ஹமீது, அபு, அசன் ஆகியோரை அங்கு வரவழைத்துள்ளார். அதன் பின்னர் அன்சாரி உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து யாகூப்பையும் அவரது மனைவியையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த யாகூப் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அன்சாரி ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அன்சாரி உள்ளிட்ட 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.