மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தற்போது மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். மேலும் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.