சேலத்தில் நேற்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று சேலத்தில் தனது நான்காம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் கார் மூலம் சேலம் அழகாபுரம் பகுதிக்கு வந்தார்.
அங்கு அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது, இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை உருவாக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதை உங்களது முகமும், ஆசியும், மீண்டும் மீண்டும் கூறுகிறது. இங்கு கூடியிருக்கும் தொண்டர்கள் அனைவரும் ஆளுக்கு 100 நபர்களை சந்தித்தாலே போதும் நாளை நமதே. நமது கதை தொடங்கும், அவர்களது கதை முடியும். இது நிச்சயம் நடக்கும் என்று நான் நம்புகிறேன்.
இனி வரவிருக்கும் 10 ஆண்டுகள் தமிழகத்திற்கு புத்துணர்ச்சி தரும் ஆண்டாக இருக்கும். நேர்மையான திட்டங்களை வகுத்து பொது மக்களின் வாழ்க்கை மேம்பட மக்கள் நீதி மய்யம் பாடுபடும். ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே. நிச்சயம் நமதே. என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சேலம் ரெட்டிபட்டி பகுதியிலும், அயோத்தியாபட்டணம் ஒன்றியம் அலுவலகம் முன்பும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.