தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 595 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 595 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 8 ஆயிரத்து 885 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 67 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 653 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 278 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 25 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் சில நாட்களாக நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லாத நிலையில் தற்போது தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் நோய் கட்டுப்பட்டு பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் 10 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 5603 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்து 52 ஆயிரத்து 938 பேர் கொரோனாவில் இருந்து மீண்டும் உள்ளனர்.