Categories
மாநில செய்திகள்

நாளைக்கு 5,08,500 கோவிஷீல்டு வந்துரும்…. வாரம் முழுவதும் போட்டுக்கலாம்…. தமிழக சுகாதாரத்துறை செயலர் அறிவிப்பு….!!

கூடுதலாக 5,08,500 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தமிழகத்திற்கு நாளை வர இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து உலக நாடுகளை உலுக்கி வந்த  கொரோனா வைரசால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியா உட்பட பல உலக நாடுகள் கொரோனாவுக்கு  எதிராக தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசிகளுக்கு நாளுக்கு நாள் அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை. நேற்று ஒரே நாளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களில் தடுப்பூசி போட்டு கொள்பவர்களின்  எண்ணிக்கை குறைவாக இருந்தது.

ஒரு சில மாநிலங்களில் எல்லா நாட்களிலும் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் வாரம் முழுவதும் உள்ள அனைத்து நாட்களிலும் தடுப்பூசியை செலுத்த  தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்திற்கு மேலும் 5,08,500 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் நாளை வர உள்ளது.

சுகாதாரப் பணியாளர்களை அடுத்து முன் களப்பணியாளர்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக இரண்டு லட்சம் பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 1,07,000க்கும்  மேற்பட்டவர்கள் காவல்துறையினர்  70,000க்கும் மேற்பட்டவர்கள் உள்ளாட்சி ஊழியர்கள். மேலும் கொரானாவுக்கு எதிரான தடுப்பூசிகள் குறித்து சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை  பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |