தமிழக அரசு ஊழியர்கள் ஆண்டு வருமானம் அதிகம் பெறுபவர்கள் மற்றும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் ஆகியோருக்கு ரேஷனில் அரிசி வழங்கப்படாது என்று வெளியான செய்தி பொய் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொது விநியோகத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆண்டு வருமானம் அதிகமுள்ள குடும்பங்களுக்கும் மற்றும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரேஷன் கடையில் அரிசி வழங்கப்படாது என்று சமூக ஊடகங்களில் பொய்யான தகவல் பரவி வந்தது. இதையடுத்து நியாய விலை கடையில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதில் எந்தவித மாற்றமும் கொண்டு வரவில்லை.
அதுமட்டுமில்லாமல் அரிசி பெற்றுவரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இதுகுறித்து சமூக ஊடங்களில் பரவி வரும் செய்திகள் உண்மை இல்லை என்று கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.