புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6.14 கோடியில் கட்டப்படும் உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யாநாதன் நேற்று மாலை ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்க கூடிய வகையில் சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் சுத்தப்படுத்தப் பட்டு வருகிறது. மேலும் ஐந்து ஆண்டுகளில் காவேரி, பாலாறு, தாமிரபரணி, காளிங்கராயன், வாய்க்கால் மற்றும் நொய்யல் ஆகிய ஆறுகளை பாதுகாக்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
அதன் பிறகு காவிரி ஆற்றில் மேட்டூரில் இருந்து மயிலாடுதுறை வரை மருத்துவ, உலோக கழிவுகள் ஆகியவை கலந்துள்ளது என்று சென்னை ஐஐடி நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனால் காவிரி ஆற்றின் நீர் மாதிரிகளை பரிசோதனை மையங்களுக்கு அனுப்பப்பட்டு இதன் முடிவுகள் வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் ஸ்டாலின் மூன்று ஆண்டுகளில் உலோக கழிவுகள் கலக்காமல் ஆற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்த தடையை நீடித்து துணியால் ஆன பைகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக இருப்பதை போன்று மற்ற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை முழுவதுமாக நிறைவேற்றப்பட வேண்டும். இதையடுத்து தீபாவளி பண்டிகை வருவதால் மக்களுக்கு பட்டாசு வெடிப்பதில் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் உச்சநீதிமன்றத்தின் கருத்துகளின் அடிப்படையில் தீபாவளி பட்டாசுகள் வெடிக்கப்படும். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகடாமி அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் அமைக்க வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.