தமிழகத்தில் ஒரு சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் கூறியது, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அதனைத் தொடர்ந்து வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதையடுத்து தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதுமட்டுமில்லாமல் நாளை நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் வருகின்ற 17 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் மீனவர்கள் கடல் அரபிக் கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.