தாமிர கம்பிகளை திருடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழவேலாயுதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. தற்போது அந்த நிறுவனம் செயல்படவில்லை. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் தாமிர கம்பிகளை லோடு வேனில் 5 பேர் திருடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தாமிரக் கம்பிகளுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் என்ஜினீயர் சாந்தகுமார், புதியம்புத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது லோடு வேனில் சந்தேகத்திற்கிடமான வகையில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் வேலாயுதபுரம் கிராமத்தில் வசிக்கும் சஞ்சய் சிங், பொன்ராஜ், செல்வ கணபதி, செல்லத்துரை, முருகேசன் என்பதும் அவர்கள் தனியார் நிறுவனத்தில் மின்கம்பிகளை திருடியதும் தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.1.80 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து தாமிரக் கம்பிகள் மற்றும் லோடு வேனையும் பறிமுதல் செய்தனர்.