தனது வேலையை திரும்ப கேட்டு கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்த அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் தன்வீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த வருடம் துறை ரீதியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் தனக்கு திரும்பவும் பணி வழங்கக் கோரி அவர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளார்.
அப்போது தன்வீர் அகமது தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் உடனே அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தன்வீர் அகமதுவை கைது செய்துள்ளனர்.