ரயிலில் அடிபட்டு என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தின் பின் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் இறந்த வாலிபர் ஒட்டப்பட்டி பழைய குடியிருப்பு பகுதியை சேர்ந்த என்ஜினீயர் பைரவன் என்பதும், இவர் சென்னையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் பைரவன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இறந்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பைரவன் எழுதிய ஒரு கடிதம் காவல்துறையினரிடம் சிக்கியது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.