தண்டவாளத்தில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள திருமால்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து சடலமாக கிடந்தவருக்கு 40 வயது இருக்கும். இவர் யார் எந்த ஊரில் வசிப்பவர் என இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் காணப்படுவதால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து மர்ம நபர்கள் எவரேனும் அவரை கடத்தி வந்து எரித்துக் கொலை செய்து உடலை வீசினார்களா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.