கேரள தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் டீ நிறுவனத்துடன் தொடர்பு இருக்கலாம் என கொச்சி நீதிமன்றத்தில் என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்திய வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேர் ஜாமீன் கோரி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது என்ஐஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அர்ஜுன் அமலாபட்டா தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டும் உள்ளானவர்களுக்கு நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் டீ நிறுவனத்துடன் தொடர்பு இருக்கலாமென சந்தேகிப்பதாக தெரிவித்தார்.
மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரமேஷ் தான்சானியா நாட்டில் வைர வியாபாரம் தொடங்க முயற்சிகள் மேற்கொண்டதாக தெரிவித்த அவர் தன்சானியாா மற்றும் துபாய் போன்ற நாடுகளில் தாவூத் இப்ராஹிமின் நிறுவனம் உயிர்ப்புடன் இருந்ததாக குறிப்பிட்டார். தன்சானியாவில் டி நிறுவனத்தின் விவகாரங்களை தென்இந்தியரான பிரோஸ் கவனித்து வந்ததாகவும் ரமேஷுக்கு டி நிறுவனத்துடன் தொடர்பு இருக்கலாம் என கருதுவதாகவும் என்ஐஏ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.