திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன், பதவியை கேட்டு பெறமாட்டேன் என்றும், உழைப்பை பார்த்து அவர்கள் கொடுப்பார்கள் என்று பேசியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ் செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தரக்குறைவாக விமர்சித்தார். தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், புதிய கொள்கை பரப்பு செயலாளர் அறிவிக்கப போவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ் செல்வன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். தங்க தமிழ் செல்வனுடன் சேர்ந்து தேனி மாவட்ட நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்தனர்.
தங்க தமிழ் செல்வன் தன்னை திமுகவில் இணைத்து கொண்ட பிறகு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு வந்துள்ளது. அதை ஏற்று நான் திமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவில் இருந்து வந்த பலரும் திமுக வந்த பின் அவர்களுக்கு திமுக நல்லதே செய்துள்ளது. மாற்றான் தோட்டத்து மலருக்கும் மனமுண்டு என்று அண்ணா சொன்னதை போல அதனை கடைபிடிக்கும் தலைவர் ஸ்டாலினை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கேட்டுப் பெறுவது பதவியல்ல. உழைப்பை பார்த்து கொடுப்பது. என் உழைப்பை பார்த்து பதவி கொடுப்பார்கள் என நான் நம்புகிறேன். ஒற்றை தலைமை இருந்தால் தான் கட்சி சிறப்பாக செயல்பட முடியும். அதிமுகவில் ஒற்றை தம்மை இல்லை. அதிமுவை பாஜ இயக்கி வருகிறது. அதனால் தன் மானத்தை இழந்து நான் அதிமுகவில் போய் சேரவில்லை. ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி, கலைஞர் இறந்த நாளில் நீதிமன்றம் சென்று மெரினாவில் இடம் பெற்றார் என்று அவர் கூறினார்.