250 மி.கி தங்கத்தில் பொங்கல் பானை செய்து தமிழக அரசுக்கு பொற்கொல்லர் கோரிக்கை வைத்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூரை சேர்ந்தவர் யூ. எம் .டி ராஜா. இவர் பொற்கொல்லராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் மில்லிகிராம் அளவு தங்கத்தில் தத்ரூபமான சிற்பங்கள் செய்து அனைவரையும் அசத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொற்கொல்லர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அவர் 250 மில்லி கிராம் தங்கத்தில் பொங்கலுக்கான சிற்பங்களை வடிவமைத்துள்ளார்.
அதில் பொங்கல் பானை, தென்னைமரம், காளைமாடு, கரும்பு, நெற்கதிர்,சேவல் என அனைத்தும் மிகச் சிறிய வடிவில் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். இதுகுறித்து ராஜா கூறுகையில்,” ஊரடங்கு காலக்கட்டத்தில் பொற்கொல்லர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின் பல தொழில்கள் மீண்டு வந்து விட்டது. ஆனால் பொற்கொல்லர்கள் அதே நிலையில்தான் உள்ளனர்.
இதுவரை எங்களுக்கு அரசு எந்தவிதமான நிவாரணமும் வழங்கவில்லை.தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது.தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியும் உண்டு. அதனை மனதில் வைத்துக் கொண்டு தான் இவற்றை நான் வடிவமைத்துள்ளேன். எனவே அரசு எங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கூறினார். மேலும் அவற்றை உருவாக்க இரண்டு நாட்கள் கடுமையாக உழைத்ததாக தெரிவித்தார்”.