தங்கும் விடுதி தீடிரென இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாங்காய் மாகாணத்தில் சுஹாவ் நகரில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த தங்கும் விடுதி நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அந்த விடுதியில் உணவு அருந்த வந்தவர்கள் மற்றும் தங்கியிருந்தவர்கள் என 23 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்புகுழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து மீட்கப்பட்டவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டிடம் எப்படி இடிந்து விழுந்தது என்று விசாரணைகள் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.