கிராம மக்கள் தனி வார்டு அமைத்து தருமாறு தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி கிராமப்புறத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 1-வது வார்டில் வசிக்கும் 250-க்கும் அதிகமான கிராம மக்கள் ஒன்று திரண்டு உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குடிநீர் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில் சிக்கல்கள் நிலவி வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதனால் இப்பகுதியில் வசிக்கின்ற கிராம மக்கள் தனி வார்டு அமைத்து தர வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரப்படும் எனவும், விரைவில் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் எனவும் தாசில்தார் உறுதியளித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.