மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் பண்ணவாடி நீர்தேக்க பகுதியில் இருந்த கிறிஸ்தவ கோபுரம் மீண்டும் தண்ணீரில் மூழ்கி விட்டது.
சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பு அதன் நீர்த்தேக்க பகுதிகளில் பண்ணவாடி, கோட்டையூர், காவேரிபுரம், புதுவேலமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்கள் இருந்தது. இதனையடுத்து அணையின் கட்டுமான பணிகள் தொடங்கியபிறகு கிராமத்தில் இருந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி பல இடங்களில் குடி புகுந்தனர். அப்போது அவர்கள் தாங்கள் வழிபட்ட ஜலகண்டேஸ்வரர் ஆலயம்,நந்தி சிலை,ராஜா கோட்டை,கிறிஸ்துவ கோபுரம் போன்ற வழிபாட்டு தலங்களை விட்டுவிட்டு வெளியேறினர். அதன்பின் மேட்டூர் அணை கட்டப்பட்டு குடியிருப்பு பகுதிகள் நீர்த்தேக்க பகுதிக்குள் மூழ்கி விட்டது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71 அடியாக இருக்கும்போது தண்ணீரில் மூழ்கி இருந்த கிறிஸ்தவ கோபுரம் வெளியே தெரிவது வழக்கமாக இருந்தது.
அதேபோன்று அணையின் நீர்மட்டம் 60 அடியாக இருந்த போது நந்தி சிலை வெளியே தெரியும். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் இந்த புராதன சின்னங்களான கிறிஸ்தவ கோபுரம் மற்றும் நந்தி சிலை வெளியே தெரிந்தது. இந்தப் புராதன நினைவுச் சின்னங்களை பார்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பண்ணவாடி பரிசல் துறைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையினால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து பண்ணவாடி நீர்தேக்க பகுதியில் இருந்த நந்தி சிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கியது. இதேபோன்று கிறிஸ்தவ கோபுரமும் மீண்டும் தண்ணீரில் மூழ்கி விட்டது. இவ்வாறு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவது காவிரி டெல்டா மாவட்ட பாசன விவசாயிகள் இடையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.