மூதாட்டியிடம் அத்துமீறிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பகுதியில் 80 வயது மூதாட்டி வசித்து வருகின்றார். இவருக்கு 4 மகன்கள் இருக்கின்றனர். இந்த 4 மகன்களும் திருமணம் முடிந்து தன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மூதாட்டி அவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மூதாட்டி கொடுத்த புகாரின்படி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவின்படி, துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் மூதாட்டியை கற்பழித்த 2 பேரை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையில் தனிப்படையினர் 2 வாலிபர்களை சந்தேகத்தின்படி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் வாலிபர்கள் நங்கவள்ளி பெரிய சோரகை தேங்காய் கோட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், விக்னேஷ் ஆகியோர் என்பதும், இவர்கள் மூதாட்டியை பலாத்காரம் செய்ததும் தனிப்படையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.