Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில்… கத்தி முனையில் 14 பவுன் நகை கொள்ளை… சேலம் அருகே பரபரப்பு….!!

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கத்தி முனையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டத்திலுள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் தனியார் மருந்து  நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். சந்திரசேகரன் வாழப்பாடி தாலுகா அலுவலகம் அருகே தனக்கு சொந்தமான தோட்டத்தில் புதிதாக வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது  நள்ளிரவு 1 மணியளவில் அவரது வீட்டு கதவை கற்களால் தாக்கி முகமூடி கொள்ளையர்கள் 5க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் கையில் வைத்திருந்த கத்தி,அரிவாள் ,உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் சந்திர சேகரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கத்திமுனையில் அவரது மனைவி கண்மணி மற்றும் அவரது தாயார் ராஜாமணி ஆகியோர் கழுத்தில்  அணிந்திருந்த தாலி சங்கிலி மற்றும் பீரோவில்  இருந்த  14 பவுன் நகைகள், சந்திரசேகரனின் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்ட், செல்போன் ஆகியவற்றையும் கொள்ளையடித்து கொண்டு அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

இரவு நேரத்தில் நடந்த இந்த கொள்ளை  சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.பின்னர்  மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முகமூடி கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர்.காவல் துறையினர் முகமூடி அணிந்து கைவரிசை காட்டிய கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் அப்பகுதியில் நடந்த   இரண்டாவது கொள்ளை  சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |