Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் ட்ரெய்லரில் சாதனை படைத்த ‘பாகி 3’

அண்ணன் – தம்பிக்கு இடையேயான பாச பிணைப்பை எடுத்துக் கூறும் கதையம்சத்தில் அமைந்திருக்கும் ‘பாகி 3’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

‘வேட்டை’ படத்தின் ரீமேக்காக டைகர் ஷெராஃப் நடிப்பில் ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் ‘பாகி 3’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டடது. தமிழில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலாபால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘வேட்டை’ படத்தின் ரீமேக்தான் ‘பாகி 3’

இந்தப் படத்தில் டைகர் ஷெராஃப் ரோனி என்ற கேரக்டரிலும், ரித்தேஷ் தேஷ்முக், விக்ரம் என்ற கேரக்டரிலும் சகோதரர்களாக நடித்துள்ளனர். ரித்தேஷ் போலீஸாக தோன்றியுள்ளார். ரோனி – விக்ரம் ஆகிய சகோதரர்களுக்கு இடையேயான பாசப் பிணைப்பை வெளிப்படுத்துவதுபோல் படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது.

சிரியா நாட்டுக்குச் சென்ற விக்ரம் கடத்தல்காரர்கள் பிடியில் சிக்க, ஒற்றை ஆளாக தனது சகோதரரை ரோனி எப்படி மீட்கிறார் என்பதை அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் பாகி 3 படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

‘பாகி’ பட வரிசையில் மூன்றாவது பாகமாக வெளிவரவிருக்கும் பாகி 3 படத்தில் ஷ்ரதா கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். அங்கிதா லோஹான்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் டைகர் ஷெராஃப்பின் தந்தையும், பாலிவுட் மூத்த நடிகருமான ஜாக்கி ஷெராஃப் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதுபோன்றதொரு காட்சி எதுவும் ட்ரெய்லரில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் ட்ரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் 59 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி பார்க்கப்பட்ட பாலிவுட் ட்ரெய்லர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

இது பற்றி டைகர் ஷெராஃப் தனது சமூகவலைதளத்தில் படத்தின் ட்ரெய்லரை பார்த்த அனைவருக்கும் நன்றி. உண்மையில் உங்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இப்படத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு எப்போதும் தேவை என்று பதிவிட்டுள்ளார்.

அகமத் கான் இயக்கத்தில் உருவாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகி 3 மார்ச் 6ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Categories

Tech |