நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றியடைந்ததை அடுத்து OPS , EPS கூட்டறிக்கை விடுத்துள்ளனர்
மஹாராஷ்டிரம் ,ஹரியானா மாநிலங்களின் சட்டசபை மற்றும் தமிழகம் உட்பட பல மாநிலங்களின் இடைத்தேர்தல் கடந்த 21_ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறது. அதன் முடிவு இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி மற்றும் திமுக வசம் இருந்த விக்கிரவாண்டி தொகுதியை அதிமுக கைப்பற்றியது.
இந்த வெற்றியை அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இனிப்பு வழங்கி , பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இடைத்தேர்தல் வெற்றி குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள கூட்டறிக்கையில் , ஜனநாயக ஆட்சி முறையில் தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று பத்திரமாகும். இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி. இது மிகுந்த உற்சாகத்தையும், எதிர்காலத்தில் சிறப்புடன் பணியாற்ற தேவையான உறுதியையும் அளிப்பதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.