நகைக்கடையில் 20 பவுன் தங்க நகையை கையாடல் செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பைபாஸ் ரோட்டில் நகை கடை ஒன்று அமைந்திருக்கிறது. இந்த நகை கடையில் தினமும் இரவு நேரத்தில் நகைகள் இருப்பு சரி பார்க்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 27-ந் தேதி இரவு நேரத்தில் கடையில் இருந்த நகைகள் சரி பார்த்துக் கொண்டிருக்கும் போது 5 செயின்கள் இருப்பு குறைவாக இருந்துள்ளது. பின்னர் இது குறித்து கடையின் மேலாளர் சுரேஷ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணியாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கடையில் வேலை பார்க்கும் கேசியர் மாரியப்பன், ஆனந்தபாபு ஆகிய 2 பேரும் நகையே திருடியது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறை அவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 20 பவுன் தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.