தண்ணீர் தொட்டியில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள என் காஞ்சிபுரம் பகுதியில் விவசாயியான பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவியிடம் குளிக்க சென்று வருவதாக கூறி சென்ற பிரகாஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது நாட்டான்வலசு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 12 அடி தண்ணீர் தொட்டியில் பிரகாஷ் இறந்து கிடந்த தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவரது உறவினர்கள் ஊதியூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரகாஷின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பிரகாஷ் குளிக்க வரும்போது குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் தண்ணீர் நிரம்பிய தொட்டியில் குளிக்கும் போது மூச்சு திணறி பிரகாஷ் இறந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.