குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலத்தாழையுத்து பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6-ஆம் வகுப்பு படித்து வந்த சக்தி என்ற மகன் இருந்துள்ளார். மேலும் அதே பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8-ஆம் வகுப்பு படித்து வரும் கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் நண்பர்களான கார்த்திக், சக்தி ஆகிய 2 பேரும் காலையில் அப்பகுதியிலுள்ள கல்வெட்டான்குழி பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் குளிக்க சென்றுள்ளனர்.
தற்போது தனியார் ஒருவருக்கு சொந்தமான இந்த குவாரி கடந்த சில நாட்களாக மழை பெய்ததன் காரணமாக அதிகளவு தண்ணீர் தேங்கியிருந்தது. அப்போது அங்கு குளிக்க சென்ற சக்தி, கார்த்திக் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதனைப் பார்த்த அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் இருவரையும் ஆழமான பகுதிக்கு செல்லாதீர்கள் என கூறியுள்ளனர். ஆனால் சக்தி, கார்த்திக் ஆகிய இருவரும் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் நீரில் மூழ்கினர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டார்.
அந்த சத்தம் கேட்டு ஏராளமானோர் அங்கு ஓடிச் சென்று நீரில் மூழ்கிய 2 சிறுவர்களையும் மீட்டனர். ஆனால் இருவரும் தண்ணீரில் மூழ்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைப் பார்த்த சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரின் உடலையும் உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.