தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கி வேன் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரெட்டையூரணி கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதிராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவர் சாத்தான்குளம் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரிடம் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பாரதிராஜா ஐயப்ப பக்தர்களை வேனில் ஏற்றிக்கொண்டு சபரிமலை யாத்திரைக்கு செல்வதற்காக ஏரல் கோவிலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலையில் ஐயப்ப பக்தர்கள் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது பாரதிராஜாவும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாரதிராஜாவின் உறவினர்கள் ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாரதிராஜாவின் உடலை உடனடியாக கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.