தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் பழையபேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரமேஷ்- புனிதா. இவர்களுக்கு ஒரு வயதில் ரஷீத் என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்களது வீட்டிற்கு முன்பாக 5 அடி ஆழம் கொண்ட தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் ரஷீத்தின் பாட்டி தொட்டியின் மூடியை அப்புறப்படுத்திவிட்டு தண்ணீரை எடுத்துக்கொண்டு தொட்டியின் மூடியை மூடாமல் சென்றுள்ளார். அப்போது விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ரஷீத் 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான்.
இதனைப் பார்த்து பதறிய பெற்றோர் தொட்டிக்குள் இறங்கி குழந்தையை தூக்கிக்கொண்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையில் கதறி அழுத காட்சி அனைவரது நெஞ்சையும் உலுக்கியது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தை ரஷீத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.