தண்ணீர் கொடுக்க சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்புராயபுரம் பகுதியில் ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். இவருக்கு ஜேசுகனி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜேசுகனி பெட்டி கடையில் இருக்கும்போது 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று ஜேசுகனியிடம் தாகமாக இருப்பதால் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் ஜேசுகனி அவர்களுக்கு தண்ணீரை பிடித்து கொடுப்பதற்காக சென்று போது திடீரென அந்த இரண்டு நபர்களும் ஜேசுகனியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.
இதனையடுத்து ஜேசுகனி அலறி சத்தம் போட்ட போது அதை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து செல்வதற்குள் அந்த 2 நபர்களும் ஜேசுகனியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜேசுகனி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.