குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளத்து மேட்டு பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குபேரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குபேரன் தனது தம்பி வேலு மற்றும் நண்பர்கள் ஆகாஷ், லெவின், சஞ்சய் ஆகியோருடன் சேர்ந்து குளத்தில் குளிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது சிறுவர்கள் குளித்து கொண்டிருந்த நிலையில் குபேரன் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாத காரணத்தினால் நீரில் மூழ்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பி வேலு மற்றும் அவரின் நண்பர்கள் சத்தம்போட்டு கூச்சலிட்டனர். இதனை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரில் மூழ்கி குபேரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குபேரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.