9 மாதங்களாக கிராமத்திற்கு குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாண்டூர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் அப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சில காரணங்களினால் குழாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டதால் முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் 100-க்கும் அதிகமானோர் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது தங்களின் கோரிக்கை குறித்து உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுப்போம் என காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர். அதற்கு பிறகு கிராம மக்கள் போராட்டத்தை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.