கதிர் அறுக்கும் இயந்திரம் ஏறி தந்தையின் கண்முன்னேயே சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருமருதூர் கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற 14 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் கிடங்கு பகுதிக்கு கதிர் அறுக்கும் அறுவடையை பார்க்க சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹரிஹரனை அமர்த்திவிட்டு அவரது தந்தையான ராஜமாணிக்கம் அருகில் நின்று கொண்டிருந்தார். இதனை அடுத்து தந்தை மகன் இருவரும் இருந்ததை கவனிக்காத பாக்கியராஜ் என்பவர் கதிர் அறுக்கும் இயந்திரத்தை இயக்கியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது கதிர் அறுக்கும் இயந்திரம் மோதியது. இதனால் கீழே விழுந்த சிறுவன் ஹரிஹரனின் தலையின் மீது கதிர் அறுக்கும் இயந்திரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இவ்வாறு 14 வயது சிறுவன் தந்தையின் கண்முன்னே துடிதுடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.