Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தந்தைக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பா…? மகன்களின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

தந்தையை இரும்புக் குழாயால் அடித்து கொலை செய்த 2 மகன்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள நெடுங்கூர் அண்ணாமலை நகரில் விவசாயி சுப்பிரமணி வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், அரவிந்த்குமார், வினோத்குமார் ஆகிய 2 மகன்களும் இருக்கின்றனர். இவர்களில் சுப்பிரமணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண்ணிற்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் சுப்பிரமணி- சாந்தி இருவருக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக சுப்பிரமணி மனைவி சாந்தியை பிரிந்து அந்தப் பெண்ணுடன் வசித்து வந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து சாந்தி தனது 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சுப்பிரமணிக்கும் அவரது 2 மகன்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த வினோத்குமார் மற்றும் அரவிந்த்குமார் ஆகிய 2 பேரும் இரும்பு குழாயால் தந்தை சுப்பிரமணியை ஓங்கி அடித்தனர். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சுப்பிரமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதன்பின் சுப்பிரமணி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தந்தையை அடித்துக் கொலை செய்த வினோத்குமார் மற்றும் அரவிந்த்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Categories

Tech |