கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அதே பகுதியில் டில்லி என்பவரும் வசித்து வருகின்றார். இவரது மகள் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் 11-ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக பேசியதாக தெரிகின்றது. இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் கூறியதால் ஆத்திரமடைந்த டில்லி கொத்தனார் ராஜேஷை நேரில் அழைத்து பேசியுள்ளார்.
இதனையடுத்து டில்லி இங்கு பேச வேண்டாம் பரனூர் ரயில் நிலையத்தில் அருகே சென்று பேசலாம் என கூறி ராஜேஷை அழைத்து சென்றுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த டில்லி அங்கு இருந்த இரும்பு கம்பியால் ராஜேஷை தாறுமாறாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைத்தொடர்ந்து டில்லி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய டில்லியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.