மது குடிப்பதற்கு மகன் பணம் கொடுக்காததால் தந்தை கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூளை அருள் வேலவன் நகர் பகுதியில் தறிப்பட்டறை தொழிலாளியாக ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இவருக்கு சந்தோஷ்குமார், கவின் ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மனைவி இறந்த வேதனையில் ராஜேந்திரன் தினசரி அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு அவரது மகன்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மகன்களிடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம்போல் ராஜேந்திரன் தன்னுடைய மகன் சதீஷ்குமாரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் சந்தோஷ்குமார் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்பின் ராஜேந்திரன் வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியால் தனது வயிற்றில் சரமாரியாக குத்திக் கொண்டார். இதனை பார்த்த அவரது மகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.