குடும்பப் பிரச்சினை காரணமாக தட்டிக் கேட்க சென்ற இடத்தில் தந்தை,மகன் இணைந்து இரும்புக் கம்பியால் உறவினரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள மத்தாயி பகுதியில் ராமர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சசிகுமார் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் சசிகுமாரின் சித்திகளான சுதா, செல்வராணி ஆகிய 2 பேரையும் அப்பகுதியில் வசித்து வரும் செம்மலைபாண்டியனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுதா தற்கொலை செய்து இறந்து விட்டார். இந்நிலையில் செல்வராணி மட்டும் செம்மலையுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு ஹரிஹரசுதன் என்ற மகன் இருக்கின்றார். இதனையடுத்து செம்மலைக்கும் ,செல்வராணிக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து செல்வராணி சசிகுமாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சசிகுமாரும் அவரது மாமா குருநாதன் என்பவரும் இணைந்து செம்மலை வீட்டிற்குச் சென்று செல்வராணிடம் எதற்காக தகராறு செய்தீர்கள் என்று தட்டிகேட்டுள்ளனர். அப்போது கோபம் அடைந்த செம்மலைபாண்டியன் மற்றும் அவரது மகன் ஹரிஹரசுதன் ஆகியோர் இணைந்து அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்து சசிகுமாரையும், குருநாதனையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சசிக்குமார் மற்றும் குருநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் இரும்பு கம்பியால் தாக்கிய செம்மலை பாண்டியன் மற்றும் ஹரிஹரன்சுதன் மீது வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.