வாணியம்பாடி ரேஷன் கடையில் தரமில்லாத அரிசியை விநியோகம் செய்வதாக பொதுமக்கள் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ரேஷன்கடை மட்டும் காலை 8 மணிமுதல் பகல் 12 மணிவரை திறப்பதற்கு அரசு அனுமதித்தது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் ஏராளமான கடைகளில் சமூக இடைவெளி இன்றி மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனையடுத்து கலெக்டர் சிவன் அருள் உத்தரவின்படி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில், வருவாய்த்துறையினர் கோணாமேடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் ரேஷன் கடையில் குவிந்திருந்த மக்களிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அங்கு நின்ற பொதுமக்கள் அரிசி வாங்கி செல்வதற்காகவும், ஒருசில மூட்டைகளில் தரமில்லாத அரிசி இருப்பதாகவும் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி ரேஷன் கடையில் இருந்த அரிசி மூட்டைகளை வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி ஆய்வு செய்து அலுவலர்களை வரவழைத்து உரிய விசாரணை நடத்தியுள்ளார். மேலும் ரேஷன் கடையில் கூட்டமாக நின்ற பொதுமக்களிடம் டோக்கன் வழங்கி சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்கிச் செல்லுமாறு வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி அறிவுறுத்தினார்.