மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 2019ல் மட்டுமே இந்தியாவில் சுமார் 1,39,123 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.
சராசரியாக நாள் ஒன்றுக்கு 381 தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டுகளைவிட சுமார் 3.4% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 18,916 தற்கொலைகளும், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 13,493 தற்கொலைகளும் பதிவாகியுள்ளன.
மேலும் குடும்பமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் வகித்துள்ளது. மறுபுறம் தற்கொலை செய்துக்கொண்டோர் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. 2018 இல் சென்னையில் 2,102 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், 2019 இல் 2,461 பேர் தற்கொலை செய்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக டெல்லியில் 2,423 பேர், பெங்களூருவில் 1,081 பேர், மும்பையில் 1,229 பேர் தற்கொலை செய்துள்ளனர்.