தென்தாமரைகுளத்தில் காதலியை திருமணம் செய்ய முடியாததால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைகுளம் சர்ச் தெருவில் பால்குடம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நிஷாந்த் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நிஷாந்த் அதே பகுதியில் வசிக்கக்கூடிய வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் தெரிந்து இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக நிஷாந்த் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். இந்நிலையில் நிஷாந்த் தன் அறைக்குள் உறங்க சென்றுள்ளார். இதனையடுத்து நிஷாந்த் பெற்றோர்கள் வெகுநேரமாகியும் அறை கதவு திறக்காத காரணத்தினால் கதவைத் தட்டி அழைத்தனர்.
இதனால் சந்தேகமடைந்த நிஷாந்த் பெற்றோர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது நிஷாந்த் தூக்கிட்டு சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிஷாந்த்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து நிஷாந்த்தின் அறையை காவல்துறையினர் சோதனையிட்டதில் கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொள்வதாகவும், தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.