தற்கொலை செய்யப் போவதாக காவல் துறையினர் ஆடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் பகுதியில் அலெக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் காவல்துறையினராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அலெக்ஸ் தான் தற்கொலை செய்யப் போவதாக கூறி ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 29-ஆம் தேதி எனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என வீட்டிலிருந்து போன் வந்தது. எனது மனைவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். உடனே எனது உயர் அதிகாரியிடம் நான் 4 நாட்கள் விடுமுறை கேட்டேன். அப்போது அவர் 4 நாட்கள் தான் விடுமுறை தர முடியும் என்றும், உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் பாதுகாப்பு குறித்து கண்டிப்பாக வந்து விட வேண்டும் என்றும் கூறினார்.
அதன்பின் நான் எனது ஊருக்கு புறப்பட்டுச் சென்றேன். அங்கு எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த அடுத்த நாளே இறந்துவிட்டது. நான் இது குறித்து என் உயர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்தேன். ஆனால் அதற்கு அவர் 4 நாட்களுக்கு விடுப்பு தர முடியாது எனவும், 6-ஆம் தேதி தேர்தல் முடிந்ததும் விடுமுறை எடுத்துக் கொள் என்றும் கூறினார். அதன்பின் நான் பணிக்கு வந்துவிட்டேன். கடந்த 6-ம் தேதி எனது குழந்தைக்கு காரிய சடங்குகள் செய்ய வேண்டும் எனக் கூறி விடுமுறை கேட்டேன். ஆனால் அவர் அதற்கு விடுமுறை தரமுடியாது எனவும், 12ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின்னர் தான் பார்க்க முடியும் எனவும் கூறி விட்டார்.
மேலும் பழிவாங்கும் நோக்கில் எனக்கு டியூட்டி போடுகின்றனர். அதனால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆகையால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என அந்த ஆடியோவில் வெளியிட்டிருந்தார். இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் உயர் அதிகாரி அலெக்சை அழைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் என் குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக இப்படி செய்து விட்டேன். ஆனால் நான் விஷம் எதுவும் அருந்தவில்லை. இது போன்று இனிமேல் செய்ய மாட்டேன் எனவும் கூறினார். மேலும் இது குறித்து தொடர்ந்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.