தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பியூரோ ஆப் இந்தியா ஸ்டாண்டர்ட் ISO தர சான்றிதழ் தொடர்பான ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. அதன் பிறகு காமதேனு சிறப்பங்காடியால் கண்காட்சி நடைபெற்றது. இதை பார்வையிட்ட பிறகு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 1904-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு முன்னோடியாக திருவள்ளுவர் மாவட்டத்தில் திருர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்கப்பட்டது.
இந்த நாளில் இருந்து தற்போது 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவம்பர் 14-ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஒரு விஷயத்தை மையக் கருவாக கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன் பிறகு தமிழக முதல்வரின் ஆலோசனையின் படி தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை 1.6 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 22,293 கூட்டுறவு சங்கங்களும், 22,690 பிரதம சங்கங்களும், 22,016 மைய சங்கங்களும், 17 தலைமைச் சங்கங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த சங்கங்கள் மூலம் 67 ஆயிரம் கோடி வைப்பீடுகள் கொண்டு 67 ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு விதமான கடன்களும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 10,292 கோடி பயிர் கடன்களும், நடப்பாண்டில் 12,000 கோடி கடன் நிர்ணயிக்கப்பட்டு, 6553 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளது. இதனால் 8.97 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட அளவு கடன் தொகை வழங்கப்பட்டு விடும். இதனையடுத்து மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப 2.8 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 1.48 லட்சம் பேருக்கு ரூ. 794 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதியில் குருவை சாகுபடிக்காக 1.54 லட்சம் பேருக்கு 1072 கோடி ரூபாய் கடனும், 1.68 லட்சம் பேருக்கு கால்நடை பாதுகாப்பிற்காக 768 கோடி ரூபாய் கடனும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 33,000 ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது. கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 2015 கடைகளுக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கைகள் தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.