நில ஆக்கிரமிப்பு காரணத்தினால் புகார் கொடுப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக வந்த குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு குடும்பத்துடன் வந்த மாட்டையாம்பட்டி பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்ற விவசாயிடம் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது தீக்குளிக்கும் எண்ணத்துடன் கையில் மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அதை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து கிருஷ்ணன் குடும்பத்தினர் அளித்த புகார் மனுவில் தங்களுக்கு கிரையம் மூலம் பதியப்பட்ட 21 சென்ட் நிலத்தில் கடந்த 25 வருடங்களாக பயிர் சாகுபடி செய்து வருகிறோம்.
இதில் கடகத்தூர் பகுதியில் வசிக்கும் சிலர் எங்கள் நிலத்தில் உழுது சாகுபடி செய்த பயிர்களை அழித்து நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அதனைத் தடுக்க முயற்சித்த போது எங்களை தாக்க முயன்றனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கூறியுள்ளனர். அதற்கு பிறகு தங்களின் குடும்பத்தினரின் உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.