பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்டவரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சென்னை தாம்பரத்தை அடுத்து இருக்கும் பெருங்களத்தூரில் கிராம நிர்வாக அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் பின்புறம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சங்கர் ராஜ் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் இவர் நடைபயிற்சியை மேற்கொண்டிருந்த போது அப்பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் மது அருந்து கொண்டிருந்ததை கவனித்துள்ளார். அதோடு அந்த கும்பல் சங்கர் ராஜ் குறித்து அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து சங்கர் ராஜுக்கும் அந்த கும்பலுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக உருவெடுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் குடிபோதையில் சங்கர் ராஜை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே சங்கர் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கும்பல் சங்கர் ராஜின் செல்போனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டது. இச்சம்பவம் தொடர்பாக தகவல் கிடைக்கப் பெற்று விரைந்து வந்த காவல்துறையினர் சங்கர் ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.
சங்கர் ராஜின் செல்போன் திருடி செல்லப்பட்டதால் அதன் மூலம் வெகு விரைவில் கொலையாளிகள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட 4 பேரும் பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், பிரவீன், வெற்றிவேல், அப்பு (எ) கிளி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதற்கு முன்னதாக இவர்கள் மீது ஏதேனும் வழக்கு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.